தென்காசி: தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை கண்டித்தும், மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதியதமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மாதம் தோறும் மின்கட்டண அளவீடு, மின்கட்டண உயர்வு, மின் தட்டுப்பாட்டை சீர் செய்வது குறித்த 3 கோரிக்கைகளை அரசு நிறைவற்றும் வரை, பல கட்டங்களில் புதிய தமிழகம் கட்சியின் போராட்டம் தொடரும். திமுக ஆட்சியில் மின்சார துறையில் ஏற்படும் ஊழலை சீர் செய்தாலே, மக்கள் மீது மின் கட்டண சுமையை செலுத்தும் தேவை இருக்காது.
ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வை ரத்து செய்வோம் என கூறினார்கள், இன்னும் எத்தனை முறை ஆட்சிக்கு வந்தாலும் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. மின் அளவை மாதந்தோறும் கணக்கிடுவதாக தேர்தல் அறிக்கையில் கூறிய திமுக, அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் ” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் மூன்றாவது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்