தென்காசி: சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சுரண்டை சாலையில் அதிமுக 52வது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சங்கரன்கோவில் சங்கரநாராயண கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் கோயிலில் உள்ள கோமதி யானைக்கு பழ வகைகள் கொடுத்து ஆசி பெற்றார்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வழி நெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசியதாவது, "தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுகவினர் அடிக்கல் நாட்டுகிறார்கள். ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்கள். தப்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் இதுவரை செயல்படுத்தவில்லை.
அதனை நம்பி மக்கள் ஏமாந்து போயுள்ளனர். மேலும், சங்கரன்கோவில் பகுதியை பொறுத்தளவு, சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதியில் எந்த விதமான அடிப்படை தேவைகளும், தற்பொழுது வரைக்கும் செய்து தரவில்லை. ஆனால், தமிழக முதலமைச்சர் எங்களைப் பார்த்து பாஜகவினுடைய பி டீம் என்று கூறுகிறார். முதலில், இந்தியா கூட்டணியில் யார் யார் பிரதமர் என்று தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.
திமுக ஒரு குடும்ப கட்சி, திமுக வெறும் கட்சி மட்டும் அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. சளி புடிச்சிருக்குன்னு ஹாஸ்பிடல் போனா வெறிநாய்க்கடிக்கு ஊசி போடுறாங்க. கையோட போனா, கையே இல்லாம வெளியே வராங்க. அதிமுக, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும்.
தமிழ்நாட்டில் உரிமை காக்கவும், தமிழ்நாட்டிற்கு மத்தியிலே பல்வேறு திட்டங்களை பெறுவதற்கும், சிறுபான்மையினர் மக்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும். இதுவே எங்கள் தலைமையின் தேர்தல் முழக்கம். உங்களைப் போன்று மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அனைத்திந்திய அதிமுக நினைத்துப் பார்த்ததில்லை. எங்கள் தமிழ்நாட்டு மக்கள்தான் எஜமானர்கள்.
தமிழ்நாட்டு மக்கள்தான் வாக்களிக்கின்றனர். ஆகையால், வாக்களிக்கின்ற மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். வாக்களிக்கின்ற மக்கள் குரல் நாடாளுமன்றத்திலே ஒலிக்க வேண்டும், அதுதான் அதிமுகவின் லட்சியம். ஆகவே, யாருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அஞ்சியது கிடையாது. அஞ்சப் போவதுமில்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எறும்பு மற்றும் தேனீக்கள்போல சுறுசுறுப்பாய் தேர்தலில் களப்பணியாற்றி நம்முடைய வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு தயாராக வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிசம்பர் மாதத்தில் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு!