தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்ற சிவாலயங்களுள் ஒன்று தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநயினார்- கோமதி அம்மன் கோயில். மாவட்டத்தில் சொத்துக்கள், வருமானம் அதிகமுள்ள பெரிய கோயில் என்பதால் இதனை உதவி ஆணையர் தலைமையிலான அறநிலையத்துறை அலுவலர்கள் நிர்வகித்து வருகின்றனர்.
தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வரும் கணேசன் இந்த கோயிலின் உதவி ஆணையராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயில் அலுவலக அறையில் இருந்து சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்கள் எடுக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயில் அலுவலகத்தில் ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஏராளமான ஆவணங்கள் எரிந்து சாம்பலான நிலையில் ஒரு சில ஆவணங்கள் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்த விசாரணையில் சங்கர நயினார் கோயிலுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்தப் பகுதியில் இருப்பதாகவும், இதனை ஒரு சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக கோயில் ஊழியர்கள் ஒரு சிலர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தீயிட்டு கொளுத்தப்பட்ட ஆவணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை விரிவுபடுத்த வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மாசாணியம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து