தென்காசி மாவட்டம் நெடுஞ்சாலைத் துறை பணியில் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. மோசடி ஆவணங்கள் கொடுத்து ஒப்பந்தம் கோரியுள்ள நிலையில் அவர்கள் மீது ஊழல் தடுப்பு பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயளாளர் சிவபத்மநாதன் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் மனு அளித்தார்.
அம்மனுவில், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் இருந்து வீராணம் வரையிலும், வீராணம் பகுதியில் இருந்து சோலைசேரி பகுதி வரையிலும், மேலும் கரிவலம்வந்தநல்லூர், சுப்புலாபுரம் உள்ளிட்ட சாலைப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை 28 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்தவர் போலியான ஆவணம் கொடுத்தது தெரிந்தும் அலுவலர்கள் 10 கோடிக்கான டெண்டரை உறுதி செய்துள்ளார்கள். மற்ற டெண்டர்களை நிராகரித்ததுடன் மறு டெண்டருக்கான நோட்டீஸ் கடந்த மாத இறுதியில் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அறிவிக்கப்பட்ட டெண்டரிலும் மோசடி நடைபெற்றுள்ளது. டெண்டர் விடப்படாமல், ஒப்பந்த ஆணை இல்லாமல் ரூ.28 கோடிக்கான பணியை ஒப்பந்தகாரர் செய்து முடித்துள்ளார். இதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? பின்னணியில் யார் செயல்படுகின்றனர்? . எனவே இதற்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீதும், மோசடி ஆவணம் கொடுத்து ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரர்கள் மீதும் ஊழல் தடுப்பு பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.