தென்காசி: தென்காசி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுக அரசைக் கண்டித்து இன்று (23.07.2023) பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி, சிந்தாமணி, சிவகிரி, சங்கரன்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக விஸ்வநாதபுரத்தில் உள்ள பேருந்து நிலையம் முன்பு ஆளும் கட்சியான திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து புளியங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தற்போது உள்ள விலைவாசி உயர்வைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. திமுக அரசு கொண்டு வந்துள்ள ஆயிரம் ரூபாய் திட்டம் பெண்களை வஞ்சிக்கக் கூடியதாக இருப்பதாக அவர்கள் கூறினர்.
திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் ஆறுகள்தோறும் தடுப்பணைகள் கட்டப்படும் எனத் தெரிவித்த நிலையில் தற்போது வரை அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருக்கிறது என கண்டனம் தெரிவித்தனர். டாஸ்மாக்கால் பல ஏழை குடும்பங்கள் கண்ணீரில் வாழும் அவலம் ஏற்பட்டுக்கொண்டே இருப்பதைத் தடுக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும்; அதனை கண்டுகொள்ளாமல் அரசு காற்றில் பறக்கவிட்டதும் வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள்,“தற்போது வரை திமுக அரசு சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கிராமப்புற இளைஞர்களுக்கு இது வரை எந்தவிதமான வேலை வாய்ப்பும் வழங்கப்படாமல் உள்ளது. கிராமப்புறங்களில் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களும் தற்பொழுது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது” எனக் கூறினர்.
குறிப்பாக சிவகிரி அருகே உள்ள செண்பகவல்லி அணைக்கு உண்டான எந்த விதமான பராமரிப்பு நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை என்றும்; அதற்கு உண்டான நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் தலைவர் ஆனந்தன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பாரதியார் ஜனதா கட்சியின் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆளும் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: திருச்சியை திருவிழாவாக மாற்றிய ‘HAPPY SALAI' நிகழ்ச்சி.. ஏராளமான மக்கள் பங்கேற்பு..!