தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வீரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை ராணுவப் படை (சிஆர்பிஎஃப் ) வீரராக பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து, இவர் தமிழ்நாடு காவல்துறை மீது, குறிப்பாக சங்கரன்கோவில் காவல்துறை மீது வருத்தம் தெரிவித்து ஜார்க்கண்டிலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவரது தந்தை மற்றும் 4 மாத கர்ப்பிணியான தங்கை ஆகிய இருவரும் ரவிக்குமாருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் சங்கரன்கோவிலில் உள்ள மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக சென்றபோது, பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் வாகன சோதனையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இருவரும் சென்ற வாகனத்தை நிறுத்தி, கர்ப்பினி பெண் என்றும் பாராமல் அரை மணி நேரம் காக்க வைத்து திருடனிடம் விசாரணை செய்வதை போல் நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த வீடியோவில், இது முக்கியமாக சங்கரன்கோவில் காவல்துறைக்கு மட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும், வண்டியில் சிஆர்பிஎஃப் என்று எழுதியப் பிறகும் மடக்கியது ஏன், உள்ளூரில் இருந்து கொண்டு நீங்கள் போலீஸ் என்று வண்டியில் எழுதும்போது, நான் எழுதக் கூடாதா என்று அவர் வருத்தத்துடன் பதிவில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் சங்கரன்கோவில் காவல்துறையினரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.