தென்காசி மாவட்டம் குற்றாலத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். இந்த சீசன் காலங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைத்து அருவிகளிலும் நீராடி புது உற்சாகத்துடன் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொது மக்கள் கூடும் இடமான சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு முற்றிலும் தடை விதித்து உள்ளது.
இந்த ஆண்டு சீசனை பொறுத்தவரை திட்டமிட்டபடி ஆரம்ப கட்டத்தில் இருந்து அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து இருந்து வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிக அளவு மழை பெய்ததால் ஒரு சில நாள்கள் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி அனைத்து அருவிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
தற்போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் இருந்த நிலையில் தற்போது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த ஆண்டு சீசன் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் குற்றாலத்தை நம்பி உள்ள சிறு-குறு வியாபாரிகள் இந்த ஆண்டு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அருவிகளில் குளிக்க முடியாமல் கவலை அடைந்துள்ளனர். குற்றாலத்தில் வசிக்கும் குரங்குகளும் அவ்வப்போது உணவின்றி பெரும் சிரமப்படும் சூழழும் உள்ளது. இந்த ஆண்டு சீசன் இருந்தும் பயனில்லாத நிலையிலேயே நிறைவடைந்தது.