தென்காசி நகராட்சி அலுவலகம் அருகில் பாஜக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென கறுப்பு கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, “புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம் செய்யக் கோரும் விண்ணப்பங்களை மனுதாரர் மூலமாக மட்டுமே வாங்க வேண்டும்.
புதிய வரிவிதிப்பு மனுக்களை வரிசைப்படி மட்டுமே பரிசீலனைக்கு எடுக்க வேண்டும். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி கட்டப்படும் வீடுகளுக்கு திட்ட அனுமதி வரைபடம் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது.
வரிவிதிப்பு தொடர்பான விதிமுறைகளை ஊடகம், பத்திரிகையின் வாயிலாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்கார்கள் கலைந்துசென்றனர்.
இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில், “தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் புதிய வரிவிதிப்புகள் மற்றும் சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை மனுதாரர்கள் நேரடியாக அலுவலக கணினி மையத்தில் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
புதிய வரிவிதிப்புகள் தொடர்பான மனுக்கள் வரிசைப்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் வரிவிதிப்புகள் செய்யப்படும். பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 450 சதுரஅடிக்கு மிகாமல் உள்ள கட்டடங்களுக்கு திட்ட அனுமதி, கட்டட வரைபடம் தேவையில்லை.
வரிவிதிப்பு மற்றும் சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பான சேவைகளுக்கு பிற நபர்களை அணுக வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.