தென்காசி: மேலப்பாவூர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு சமுதாய கொடியை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஏற்றியுள்ளார். இந்த நிலையில், அந்தக் கொடி ஏற்றப்பட்ட இடம் அதே பகுதியில் வாழ்ந்து வரும் மற்றொரு சமூகத்தினருக்குச் சொந்தமான இடம் எனக்கூறப்படுகிறது.
அந்த இடத்தில் அவர்களது சமுதாய தலைவரின் சிலை வைப்பதற்கு முன்பே, அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறி காவல் நிலையம் சென்று அப்பகுதியினர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இரு வேறு சமூகத்தினரிடையே பிரச்னை ஏற்படக்கூடிய சூழல் நிலவியதால் அனுமதியின்றி ஏற்றப்பட்ட அந்தக் கொடி கம்பத்தினை காவல் துறையினர் அகற்றினர். தொடர்ந்து, மூன்று மாவட்ட காவல் துறையினர் மேலப்பாவூர் பகுதியில் குவிக்கப்பட்டு, நெல்லை சரக டிஐஜி தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று ஒரு சமூகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தங்கள் இடத்தில் அனுமதியின்றி மற்றொரு சமூகத்தின் கொடியை ஏற்றி, இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்னையைத் தூண்டும் வகையில் செயல்பட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பேரணியாக வந்தனர்.
அப்போது, அங்கிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து பேரணியாக வந்த மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஒரு சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருந்தபோதும், மேலப்பாவூர் பகுதியில் இரு வேறு சமூகத்தினருக்கு இடையே பிரச்னை ஏற்படும் அபாய சூழ்நிலை வருவதால், அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை - திருச்சி ஹைவே ஹோட்டல்களில் அதிரடி சோதனை.. விக்கிரவாண்டியில் கெட்டுப்போன உணவுகள் பறிமுதல்!