தென்காசி: தென்காசியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலாக திகழ்ந்து வருவது, காசி விஸ்வநாத சாமி கோயில். இக்கோயிலில் வருடந்தோரும் ஐப்பசி மாதத்தில் 10 நாட்கள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அன்று உலகம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தற்போது இந்த திருவிழாவில் தினமும் மாலை கோயிலில் இருந்து அம்பாள் பூங்கோயில் வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், பல்லக்கு சயன வாகனம், கிளி உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்கள் பார்வைக்காக ரதம் வீதி உலா கொண்டு வரப்படும். மேலும் திருவிழாவின் முக்கிய நாளான இன்று, காலை உலகம்மனின் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
அதன் முன்னதாக கோயிலில் இருந்து அதிகாலை உலகம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் திருத்தேரோட்டமும் நடைபெற்றது. அந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் 4 ரத வீதிகளை சுற்றி வந்ததும், தேர் நிலையில் நிறுத்தப்பட்டது.
இந்த திருவிழாவின் முக்கிய நாளான வருகிற நவம்பர் 9ஆம் தேதி அன்று மாலை 6 மணிக்கு தெற்குமாசி வீதியில் வைத்து, உலகம்மனுக்கு சாமி காட்சி கொடுக்கும் தபசு காட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு கோயிலில் வைத்து சாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. காசி விஸ்வநாத சாமி கோயிலின் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.
மேலும் இந்த திருத்தேரோட்ட நிகழ்வில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலன், தென்காசி நகர மன்றத் தலைவர் சாதிர், நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எஸ்.சுப்பையா, சுப்பிரமணிய சாமி அறங்காவலர் குழுத் தலைவர் இசக்கிரவி, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.