தென்காசி மாவட்டத்தில் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவமழையில் கார் பருவ நெல் சாகுபடி நடைபெறும். இந்த சாகுபடியில் தென்மேற்கு பருவமழை நீர்தான் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும். இந்நிலையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் கார் சாகுபடியை மேற்கொண்டனர். ஆனால் பருவமழை பொய்த்தது.
இதன் காரணமாகப் பருவமழையை எதிர்பார்த்து வடகரை, அச்சம்புதூர், இலத்தூர், சீவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்களில் நடவுசெய்த நெல் நாற்று முற்றிலும் கருகியது. ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இந்தச் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பொருளாதார இழப்பு விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்தது. இதன் காரணமாக 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. தற்போது அணைக்கு 25 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
அணை மட்டம் உயர்ந்தது ஒருபுறம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் பருவம் தவறி மழை பெய்ததால் பயிரிட்டாலும் பருவம் தவறி அறுவடை செய்யும் சூழல் ஏற்படும். இந்நிலையில் சாகுபடி செய்யமுடியாமல் திகைத்துள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்தனர்.
இதனால் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்களில் வேளாண்மை மேற்கொள்ள முடியாமல் தரிசாக விடப்பட்டுள்ளன. இனி வரக்கூடிய பிசான சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள், உரங்களை தமிழ்நாடு அரசு மானிய விலையில் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அழியும் நிலையில் சாத்தையாறு அணை: அரசு நடவடிக்கை எடுக்குமா?