தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிசெல்வம் (25) என்பவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். மாரிச்செல்வம் கடந்த ஆண்டுகளில் செல்போனில் சாதாரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட ஆரம்பித்தவர். நாளடைவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை இரவு, பகல் பாராது விளையாடி, அதற்குப் படிப்படியாக அடிமையாகத் தொடங்கி உள்ளார்.
ரம்மி விளையாட்டில் அடிமையாகிய நிலையில் அதிகமான பணத்தையும் இழந்து ரூபாய் 25 லட்சம் ரூபாய் கடனில் தவித்துள்ளார். இதில் ரூபாய் 10 லட்சம் கடனை திருப்பிச் செலுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் மீதம் உள்ள கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் தீராத மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார், மாரிசெல்வம். இதனை அடுத்து செய்வது அறியாது தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.
இதனை அறிந்த மாரிசெல்வத்தின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாரிசெல்வத்தை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மாரிசெல்வம் உயிரிழந்தார்.
இதனை அடுத்து, அவரது உடலை உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து சங்கரன்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளியாகிய இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல கடந்த சில மாதத்திற்கு முன்பாக சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி, தனியார் கல்லூரி ஒன்றில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்துவந்த நிலையில், ஆன்லைனில் டிரேடிங் செய்வதற்காக சிலருக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். அவர்கள் மகாலட்சுமியிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்ததால், தான் ஏமந்தது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியவந்தல் என்னவாகும் என்று அச்சமடைந்த மாணவி மகாலட்சுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக, ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்கள், ஆன்லைன் டிரேடிங், ஆன்லைன் கடன் செயலிகள் என்று விதவிதமான செயலிகள் மூலம் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என்று பணத்தினை பறிகொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: வாழ்க்கை மிகவும் அழகானது, அனைவரிடமும் அன்பைப் பரப்புங்கள். எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை என்பது சரியான தீர்வாகாது. சொந்தக் காரணங்களோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால், மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் 104 அல்லது 044-24640050 என்ற சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண்ணை அழையுங்கள்.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் வழக்கு: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை