தென்காசி: வன உயிரினங்களை நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயற்சி செய்த ஏழு நபர்களுக்கு வனச்சரக அலுவலகர் மௌனிகா, ரூ 5 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தென்காசி மாவட்டம், சிவகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட வடக்கு பிரிவு சுனைப்பாறை பீட் வழி சரகம் பிரிவு பகுதியில் வனவிலங்குகள் அதிகம் காணப்படும்.
அரசு பாதுகாப்பின் கீழ் உள்ள இந்த காட்டுப் பகுதியின் உள்ளே, வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து சுற்றித் திரிவதாக மாவட்ட வன உயிரின காப்பாளர் முருகனுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனை நடத்துமாறு சிவகிரி வனச்சரக அலுவலர் மெளனிகாவுக்கு வன உயிரின காப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில் சிவகிரி வனச்சரக அலுவலர் மெளனிகா தலைமையில் வனக் காவலர்கள் அசோக்குமார், வனக் காப்பாளர்கள் தருணியா ஆகியோர் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் முருகன் என்பவரது கரும்பு தோட்டத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த தேவிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முருகன்(49), சொக்கநாதன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுடலை மாடசாமி(33), ஐயப்பன்(39), மணிகண்டன்(38), கோபால்(51), சிவகாமிநாதன்(46), மாடசாமி(28) உள்ளிட்ட 7 பேரிடம் வேட்டை தடுப்பு காவலர்கள் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் அவர்கள் வன விலங்குகளை வேட்டையாட காத்திருத்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் சிவகிரி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின் அவர்கள் மீது வன உயிரின குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வன விலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக அவர்கள் 7 பேருக்கும் தலா 85,000 ரூபாய் என மொத்தம் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனச்சரக அலுவலகர் மௌனிகா அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.