சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலியந்திடல், நாலுக்கோட்டை சுற்று வட்டார கிராமங்களில் ஓராண்டுக்கு மேலாக குடிநீர் பிரச்னை நிலவுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் மட்டுமின்றி, அன்றாட வீட்டுத் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் கூட தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க ஆள்துளை கிணறு போட்டாலும் கூட உப்பு தண்ணீர் மட்டுமே வருகிறது. இதனால் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும்படி பலமுறை கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், அக்கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் குடிநீர் பிரச்னைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "வயதானவர்களும், பெண்களும், குழந்தைகளும் தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பலமுறை கிராம நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை" என்றனர்.
தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கக்கோரி ஒட்டுமொத்த கிராமமே திரண்டு வந்து மனு அளித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.