சிவகங்கை: தீபாவளி என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்து கொண்டாட்டம் தொடங்கிவிடும். ஆங்காங்கே பட்டாசு ஒலிகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளியை வரவேற்று காத்திருப்பர். இப்படி தீபாவளிப் பண்டிகையை விமரிசையாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடும் கிராமங்கள் இருந்துவரும் நிலையில், தீபாவளிப் பண்டிகையை கொண்டாடாமல் உள்ள கிராமங்களும் இருக்கின்றன. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கொள்ளுக்குடிப்பட்டி கிராமம் தீபாவளிப் பண்டிகையை 40 ஆண்டுகளாக தவிர்த்து வருகிறது. அக்கிராமம் தீபாவளிப் பண்டிகையை தவிர்த்து வருவதற்கான காரணம் கேட்போரை கூடுதல் பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது.
திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். மதுரையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாட்டிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் வருகை தருகின்றன. அந்தப் பறவைகள் அங்கு முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரித்து மீண்டும் அதனுடன் குஞ்சுப் பறவைகளுடன் பறந்து செல்கின்றன.
அப்பறவைகளுக்கு ஏற்ற இதமான தட்பவெப்பம் நிலவுகின்ற பகுதி என்பதால், கண்டம் விட்டு கண்டம் இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சின்னக்கொக்கு, உண்ணிக் கொக்கு, மடையான், சாம்பல் கொக்கு, செந்நீலக் கொக்கு, பனங்காடை, ஊதா தேன் சிட்டு, புள்ளி அலகு வாத்து, பட்டை தலை வாத்து, பாம்புதாரா, இரவு நாரை, கரண்டி வாயன், முக்குளிப்பான் என 217 வகையான 8 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் இங்கே வருகை தருகின்றன.
மேலும், மழைக் காலங்களில் அடைகாத்தலுக்கு ஏற்ற சூழல் உள்ள பகுதி என்பதால், பறவைகளின் வருகை ஆயிரக்கணக்கில் நிகழ்கிறது. இந்தப் பறவைகளின் சரணாலயம் சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி மற்றும் சின்ன கொள்ளுக்குடி ஆகிய ஊர்களின் நீர்நிலைகளில்தான் இந்தப் பறவைகள் அனைத்தும் அதன் வாழ்விடங்களை அமைத்துள்ளன. கடந்த 1977-ஆம் ஆண்டு தமிழக அரசால் பறவைகள சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, சிவகங்கை மாவட்டம் சுற்றுலா பகுதியாகவும் திகழ்கிறது.
மேற்கண்ட மூன்று கிராம மக்களும் பறவைகளின் நலன் கருதி, பட்டாசு வெடிப்பதில்லை என்ற வைராக்கியத்தோடு கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு வெடி வெடித்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதில், கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றனர். இது மட்டுமின்றி பறவைகளின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுப்பாட்டையும் அக்கிராமத்திற்கு செல்பவர்கள் உணர்கின்றனர்.
இது குறித்து கொள்ளுக்குடிப்பட்டியைச் சேர்ந்த செல்லமணி கூறுகையில், "இந்தப் பறவை சரணாலயத்திற்கு வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயம் என தவறாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. கொள்ளுகுடிப்பட்டி என்றுதான் பெயர் இடம்பெற வேண்டும். இங்குள்ள பொதுமக்கள் மட்டுமன்றி, குழந்தைகளும் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதில்லை. ஊரை விட்டு வெளியேச் சென்று பட்டாசுகள் வெடிப்பார்களே தவிர்த்து ஊருக்குள் யாரும் பட்டாசுகள் வெடிப்பதில்லை.
பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை, கடந்த 30 ஆண்டு காலமாக பின்பற்றி வருகின்றனர். பட்டாசு வெடித்தால் பறவைகள் பதட்டமடைந்து விடும் என்பதற்காகவே இந்த சுயகட்டுப்பாடு இருக்கிறோம். இது பறவைகள் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்ற காலம் என்பதால், அவற்றுக்கு தொந்தரவு தருகின்ற எந்த செயல்பாடுகளுக்கும் இங்கு அனுமதியில்லை. இந்த ஆண்டு தண்ணீர் குறைவாக உள்ளதால், பறவைகள் குறைவாகவே உள்ளன. மழை பெய்துவிட்டால் மீண்டும் அவைகள் இங்கே வந்துவிடும். வெளியிலிருந்து இந்த ஊருக்கு விருந்தினராக வருவோரும் கிராமக் கட்டுப்பாடுகளை மதிக்கின்றனர்" என்கின்றார்.
நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஒவ்வொரு நாளும் அதிகாலை மற்றும் அந்திமாலை வேளைகளில் பார்வையாளர் நேரமாக வெளியிலிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்காக தமிழ்நாடு வனத்துறை அனுமதி வழங்குகிறது. இதற்காக ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகளும், கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பார்வையாளர்கள் பறவைகளைப் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இதையடுத்து, அதே ஊரைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்மணி கூறுகையில், "புத்தாடை அணிதல், பலகாரம் சாப்பிடுதல் என தீபாவளியைக் கொண்டாடினாலும், குழந்தைகள் முதற்கொண்டு யாரும் இங்கே பட்டாசுகள் வெடிப்பதில்லை. இந்த ஊருக்கு திருமணம் செய்துவரும் பெண்கள், தங்களது ஊர்களுக்குச் சென்று தீபாவளி கொண்டாடிவிட்டுதான் வருவார்கள். இங்குள்ள பறவைகளின் உணர்வுகளை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே இந்தக் கட்டுப்பாட்டை மதிக்கின்றனர், அவற்றைப் பாதுகாக்கின்றனர். பறவைகளிள் இனிமையான சத்தமே எங்களுக்கு திருவிழா போன்றது. தீபாவளிக்கு மட்டுமன்றி திருமணம், இறப்பு சடங்குகளில்கூட வெடிகளுக்கு இங்கு இடமில்லை" என்கிறார்.
அப்பகுதி குழந்தைகளான ஷர்மி மற்றும் பிரணவ் ஆகியோர் கூறுகையில், "எங்கள் ஊரில் தீபாவளி கொண்டாடுவோம். ஆனால் பட்டாசு மட்டும் வெடிப்பதில்லை. பறவைகள் குஞ்சு பொரிக்கின்ற காலம் என்பதால், பறவைகளுக்கு அச்சம் தரும். ஆகையால் நாங்கள் பட்டாசுகள் வெடிப்பதில்லை" என்கின்றனர்.
குளிரில் நடுங்கியது என்பதற்காக மயிலுக்குப் போர்வை தந்த பேகனையும், படர்வதற்கு வழியின்றித் தவித்த முல்லைக்கொடிக்கு தனது தேரையே தந்த பாரியையும் கடையேழு வள்ளல்களாகப் போற்றிப் புகழ்கிறோம். அவர்களின் வழியில் தங்கள் ஊரை நாடி வந்த பறவைகளின் அமைதியைக் குலைக்கக்கூடாது என்பதற்காக கடந்த 40 ஆண்டுகளாக பட்டாசுகளே வெடிப்பதில்லை என்ற கிராம மக்களின் நெஞ்சுறுதியையும் வைராக்கியத்தையும் வியக்காமல் கடந்து செல்ல யாருக்கும் மனமியலாது.
இதையும் படிங்க: விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!