சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ளது கீழடி. இங்கு மாநில அரசின் தொல்லியல் துறை சார்பாக ஏழுகட்ட அகழாய்வுகள் 2014ஆம் ஆண்டுமுதல் நடைபெற்றுவருகின்றன. இதில் மூன்று கட்ட அகழாய்வை இந்திய தொல்லியல் துறையும் அதற்குப் பிறகு தற்போதுவரை தமிழ்நாடு தொல்லியல் துறையும் ஆய்வுகள் மேற்கொண்டுவருகின்றன.
கீழடி மட்டுமன்றி அதனருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் நடந்துவந்த 7ஆம் கட்ட அகழாய்வு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தன. மொத்தம் ஏழுகட்ட அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஏராளமான உறைகிணறுகளும் கண்டறியப்பட்டன.
![கீழடியில் தென்பட்ட உறைகிணறு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13955883_df.png)
இதன்மூலம் மூன்றாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் பெய்துவந்த தொடர் மழை காரணமாக கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விவசாய நிலங்களில் நீர் தேங்கியிருந்தது.
விளைநிலத்தில் தென்பட்ட உறைகிணறு
அறுவடைப் பணிக்காக நீரை வெளியேற்ற ஏழு அடி ஆழத்தில் விவசாயிகள் குழி அமைத்தனர். அந்தக் குழியில் உறைகிணறு கண்டறியப்பட்டதையடுத்து தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் உத்தரவின் அடிப்படையில் உதவி இயக்குநர் பாஸ்கரன் தலைமையிலான தொல்லியல் ஆர்வலர்கள் அப்பகுதியை ஆய்வுசெய்தனர்.
தற்போது நீர் தேங்கியிருப்பதால் அவற்றை வெளியேற்றிய பிறகு குழியைத் தோண்டி ஆய்வுசெய்ய முடிவுசெய்துள்ளனர். தொல்லியல் அலுவலர்களின் முழுமையான ஆய்வுக்குப் பிறகு இந்த உறைகிணறு எத்தனை ஆண்டுகள் பழமைவாய்ந்தது வேறு என்ன சிறப்புகள் உள்ளன என்பது தெரியவரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி சுவர் விபத்து விவகாரம்; அம்பலமான அனுமதிச் சான்றிதழ்கள்?