காரைக்குடி அருகே கல்லல் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. சமூக ஆர்வலரான இவர் நேற்று மாலை ஆடுகளுக்கு புற்கள் பறிக்க அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் இவரை தேடியுள்ளனர். இந்நிலையில் அவர் அங்கு ஆடைகளின்றி உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
இதனையடுத்து இன்று சிவகங்கை மருத்துவமனைக்கு வந்த திருநாவுக்கரசரின் உறவினர்கள், உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.
மேலும் இதுகுறித்து ஆர்.டி.ஒ வை சந்திக்க உறவினர்கள் சென்று வருவதற்குள் மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சிவகங்கை-மானாமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தார். சாலை மறியலால் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.