சிவகங்கை மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனைக்கு புதிதாகத் தலைமை பொறுப்பேற்றுள்ள மருத்துவர் சங்குமணியை நேற்று (மே.19) நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "சிவங்கை மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணி சிறப்பாக இருக்கிறது. இருந்த போதும் கரோனாவைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு. எனவே பொது மக்கள் தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். குறிப்பாக, 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை தடுப்பூசிக்குத் தட்டுபாடு இல்லை. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கப்படும் 4 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதியில், இரண்டாயிரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் கொடுக்கவிருக்கும் மீதம் இரண்டாயிரத்தை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் வழங்க முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.