சிவகங்கை: இன்று (மே.25), காரைக்குடி, சிங்கம்புணரி பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகளில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டார்.
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு உணவுபொருள்கள் வழங்கியதைத் தொடர்ந்து தடுப்பூசி முகாமினை கார்த்தி சிதம்பரம் தொடங்கி வைத்தார். அப்போது காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் மாங்குடி உடனிருந்தார்.
மேலும், தமிழ்நாடு ஊராட்சி வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஊரடங்கு கால காய்கறி விற்பனை வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கும் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், "தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ததே காரணம். இதற்கு, பிரதமர் மோடியின் தன்னிச்சையான முடிவே காரணம். தமிழ்நாட்டில் உணர்ச்சி, கவர்ச்சியை ஒதுக்கிவிட்டு வளர்ச்சியை மையமாக வைத்து அனைவருக்கும் சமமாக இலவசமாக தரமான மருத்துவம், கல்வி கிடைக்கப்பெற பொது லாட்டரியினை அறிமுகம் செய்ய வேண்டும்" என கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார்.