மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திருணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 148 தொகுதிகள் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில், 213 தொகுதிகள் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.
இதனிடையே திருணாமுல் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பாஜக அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.
இதற்கு காரணம் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்திருப்பதுதான் என கூறப்படுகிறது. இந்த வன்முறை வெறியாட்டங்களில் இதுவரை 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மம்தா பானர்ஜி எளிய முறையில் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், நேற்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தேசிய அளவில் தர்ணா நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இந்தியா முழுவதும் பாஜகவினர் பல்வேறு இடங்களில் தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல் சிவகங்கை மாவட்டம் சண்முகராஜா கலையரங்கம் அருகில் பாஜகவின் முன்னாள் தேசிய செயளாலர் ஹெச். ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து ஹெச். ராஜா கூறுகையில், 'மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறைக்கு மம்தா பானர்ஜிதான் காரணம். இதே நிலை நீடித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என எச்சரிக்கை விடுத்தார்.