சிவகங்கை: திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் பல்லாண்டுகளுக்கு முன்பு இஸ்லாமியர்கள் அதிகளவில் வசித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அப்போது 'பாத்திமா நாச்சியார்' என்ற பெண் ஒருவர் அங்கு சிறப்பாக வாழ்ந்து வந்தாகவும், அவர் இறந்த பின் 'முதுவன் திடல்' கிராமத்தின் மையப்பகுதியில் தர்கா, பள்ளிவாசல் ஆகியவற்றில் அவரை அந்தக் கிராம மக்களான இஸ்லாமியர்கள் தெய்வமாக வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இக்கிராமத்தில் தற்போது இந்துகள் அதிகளவில் வசிக்கும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் 'மொஹரம்' அன்று அக்கிராமத்தில் வாழ்ந்த இஸ்லாமியப் பெண்ணான பாத்திமா நாச்சியாரை நினைவுகூரும் வகையில் விழா கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது திருமணம், குழந்தை வரம் போன்றவற்றுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவதும், நேர்த்திக்கடன் தீர்க்க நினைப்பவை நடப்பதாகவும் அப்பகுதியிலுள்ளவர்களால் தீர்க்கமாக நம்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை, முதுவன் திடல் கிராமத்தில் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மொஹரம் 5ஆவது நாள் நேர்த்திக்கடன் நிகழ்ச்சியும், 7ஆவது நாள் தர்காவில் சப்பர பவனியும் நடைபெற்றது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (ஆக.9) அதிகாலை மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அப்போது அதிகாலை 4.20 மணிக்கு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில், ஊர்வலமாக வந்த ஏராளமானோர் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைக் காண சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப்பகுதியினரும் அங்கு கூடியிருந்தனர்.
இதனையடுத்து, பூ மொழுகுதல் என்ற நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள், தங்கள் தலையில் சேலையால் மூடியபடி பூக்குழி முன்பு அமர்ந்து, பின்னர் தம் தலையை ஈரத்துணியால் போர்த்தி, அதற்குமேல் 3 முறை தீக்கங்குகளை பெற்றுச்செல்கின்றனர். அதன் பின்னர், திருவிழாவின் இறுதியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை பொது மக்கள் மேளதாளத்துடன் கிராம எல்லை வரை தூக்கிச்சென்று மீண்டும் தர்காவிற்குக் கொண்டு வந்து சேர்த்துவிடுவர்.
இவ்வாறு மொஹரம் பண்டிகையையொட்டி நடந்த இந்த விழாவில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ஆண், பெண் என்று பாகுபாடுகளைக் களைந்து ஏராளமானோர் கலந்துகொண்டது மதநல்லிணக்கத்திற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து கொண்டாடும் திருவிழா - இதுதான் மதுரை சம்பவம்!