சேலம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் இளைஞர் சூரியா (22). இவரை நேற்றிரவு ஓமலூர் ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டத் துரத்தியுள்ளனர். அச்சத்தில் சூரியா தனது தாயார் தங்கமணிக்கு, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை வெட்டுவதற்கு துரத்துகின்றனர் எனக் கூறி கதறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த தாயார், உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, படுகாயங்களுடன் கிடந்த சூரியாவை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த சூரியா இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சூரியாவின் உறவினர்கள், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில், சூரியாவின் குடும்பத்தாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பருக்கும் முன்விரோதம் இருந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பழனிசாமிக்கும் சூரியாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். இதனால், பழனிசாமியும் அவரது கூட்டாளி ராஜேந்திரனும் சேர்ந்துதான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பழனிசாமி, ராஜேந்திரன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்