இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளாகும் நபர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைக்காக கூடுதலாக 300-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இச்சிகிச்சைப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் மூன்று மாத காலத்திற்குத் தற்காலிகமாக 90 செவிலியர் கூடுதலாக நேரடியாக நியமிக்கும் பணி நடைபெற்றுவருகின்றது.
இதுவரையில் 22 செவிலியர் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 68 செவிலியர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக செவிலியர் பணியில் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
இப்பணியில் சேர்வதற்கு பிஎஸ்.சி. நர்சிங் பட்டப்படிப்பு அல்லது நர்சிங் பட்டய படிப்பு முடித்து தமிழ்நாடு செவிலியர் சபையில் செவிலியாகப் பதிவுசெய்திருக்க வேண்டும்.
அவ்வாறு பதிவுசெய்துள்ள செவிலியர் இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வருகைதந்து விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு மூன்று மாத காலத்திற்கு தற்காலிக செவிலியராக நியமனம் செய்யப்படுவார்கள்.
எனவே, இச்செவிலியர் பணியில் சேர விருப்பமுள்ள பிஎஸ்.சி. நர்சிங் பட்டப்படிப்பு அல்லது நர்சிங் பட்டய படிப்பு முடித்து தமிழ்நாடு செவிலியர் சபையில் பதிவுசெய்துள்ள செவிலியர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரில் உடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்" என்று தெரிவித்துள்ளார்.