சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தலத்தில் அண்ணா பூங்கா, ரோஸ் கார்டன் ஆகிய இடங்களில் 100க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாக பணியாளர்களின் வேலை நாட்களை வாரத்திற்கு ஒரு நாளாக அலுவலர்கள் குறைத்துள்ளனர்.
வேலை நாட்களை அதிகப்படுத்துமாறு தற்காலிக பணியாளர்கள் அலுவலர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று (ஜூன்.12) முதல் சுழற்சி முறையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் வேலை செய்ய தினக்கூலி பணியாளர்களுக்கு தோட்டக்கலை துறை அலுவலர்கள் பணி வழங்கினர்.
இதனையடுத்து தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் மதியழகன் என்பவர் தனது ஃபேஸ்புக்கில் பணியாளர்களை ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் சித்தரித்து பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தொழிலாளர்கள், அண்ணா பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தோட்டக்கலைத்துறை உயர் அலுவலர்களின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.