சேலம் மாவட்டத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாக ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு விளங்குகிறது. சுற்றுலா பயணிகளின் கொண்டாட்டத்திற்காக, ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்தப்படும். இதனை காண, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.
அதன்படி இந்தாண்டிற்கான கோடை விழா ஏற்பாடுகள் தோட்டக்கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியில் வைக்க, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே 10 ஆயிரம் தொட்டிகளில், விதைகள் தூவப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது சீசன் களைக்கட்டியுள்ள நிலையில், அனைத்து மலர்தொட்டிகளிலும் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
இதனிடையே, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக கோடை விழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மலர் கண்காட்சிக்கு தயாரான பூந்தொட்டிகளை வைத்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த, தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி ஏற்காடு அண்ணா பூங்காவில், மேரி கோல்டு, ஜினியா, பிரஞ்ச் மேரி கோல்டு, காஸ்மாஸ், டேலியா, சால்வியா, ஆந்தூரியம், கிரிசோந்தியம் போன்ற 3,500 பூந்தொட்டிகள், முட்டைகோஸ் உள்ளிட்டவை மூலம் ‘வீட்டில் இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’ என்ற வாசகத்தை அலங்கரித்துள்ளனர். ஆனால் ஊரடங்கு இன்னும் நீடிப்பதால் பார்த்து ரசிக்க மக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க: மலர்க் கண்காட்சியை கண்டுகளித்த மருத்துவத் துறையினர்