சேலம்: எடப்பாடி அரசு மருத்துவமனை முன்பு சாலையின் நடுவில் பெண் ஒருவர் சாமியாடியதால் பரபரப்பு நிலவியது. தற்போது அந்தப் பெண் சாமியாடிய காணொலி வைரலாகியுள்ளது.
எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தாயி. இவர் காவல் நிலையம், அரசு மருத்துவமனை உள்ள பகுதிகளில் சாலையின் நடுவே நின்று சாமியாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
காவல் நிலையம் சென்று வேறொரு விவகாரம் தொடர்பாகப் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததாலும், அரசு மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததாலும், தான் சாமியாடியதாக அப்பெண் கூறியுள்ளார்.
கடந்த வாரம் எடப்பாடி காவல் நிலையம் முன்பு ஏற்கனவே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சாமியாடிய இக்காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது.
இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 9) அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளிக்க மறுப்பதாகக் கூறி அரசு மருத்துவமனையின் முன்பு சாலையின் நடுவே நின்று சாமியாடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் : ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்