விழுப்புரம் மாவட்டம், ராமகிருஷ்ணா பள்ளியில், இந்தியாவின் 70 ஆண்டுகால வளர்ச்சி, மனிதர்களின் பரிணாம வளர்ச்சி ஆகியவை குறித்து மாணவ - மாணவிகள் அறியும் வகையில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சங்கர் தொடங்கி வைத்தார்.
ஆதிகாலம் தொட்டு தற்போது வரையிலான மனிதன் எவ்வாறு வளர்ச்சி பெற்றான் என்பதை விளக்கும் வகையில் மாணவ-மாணவிகள் பல்வேறு வேடமணிந்து நடித்துக் காட்டினர். அதே போன்று தமிழ் கடவுளான முருகன், அவ்வையார் ஆகியோர் குறித்தும் நாடகங்களாகவும் மாணவர்கள் நடித்து காட்டினர்.
வரலாறு, புராணங்கள் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் வகையில் நாடகங்களாக நடத்தியது அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்திய கலாசாரம், இந்திய வளர்ச்சி, தொல்லியல் துறை மற்றும் அறிவியல் துறை பற்றி முழுமையாக மாணவர்கள் அறியும் விதமாக, இக்கண்காட்சி அமைந்ததாக, பார்வையாளர்கள், மாணவர்கள் தெரிவித்தனர். கண்காட்சியில் ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகிகள் சதீஸ்வரன், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்