சேலம் மல்லிகை சில்லரை வியாபாரிகள் சங்கத்தின் 47ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கல்வி பரிசளிப்பு விழா தமிழ் சங்கம் கட்டட வளாகத்தில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், புளி, வறுகடலை ஆகிய பொருட்களுக்கு மத்திய அரசால் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பணமதிப்பிழப்பிற்கு பின் வியாபாரம் செல்லாமல் போய்விட்டது என்றார். மேலும், குழப்பமான வரி விதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஜிஎஸ்டி வரி வசூலிப்பு சட்டத்தை இன்னும் எளிமைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் அனைத்தும் பாலிதீன் கவர்களுடன் விற்கப்படுகின்றன. ஆனால் உள்நாட்டுப் பொருட்களுக்கு பாலிதீன் கவர் செய்யப்பட்டிருந்தால், அலுவலர்கள் அவற்றை பறிமுதல் செய்து கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கிறார்கள். அபராதம் விதிப்பு மற்றும் குழப்பமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்.2ஆம் தேதிக்குப் பிறகு சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விக்கிரமராஜா, பெப்சி, கோக் உள்ளிட்ட நச்சுத்தன்மை கொண்ட வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி வருகிறோம். உள்நாட்டு குளிர்பான நிறுவனங்களை வளர்க்க அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.