சேலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். அதன்படி, 1 கோடியே 6 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு முழுவதிலும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு ஏடிஎம் கார்டு கிடைக்காதவர்களுக்கு கார்டு வழங்கும் நிகழ்ச்சி சேலம், அழகாபுரத்திலுள்ள மத்திய மாவட்ட கூட்டுறவு சமுதாய கூடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 500 பேருக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "திராவிட ஆட்சியின் மகுடம் சூட்டப்பட்ட திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நல்ல திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில்தான் அதிகமாக மகளிர் உரிமைத் தொகை பெற்று பயனடைந்துள்ளனர். சேலத்தில் 5 லட்சத்து 17 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத் தொகை பெற்றுள்ளனர். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் இத்திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர், இந்த திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் வீட்டிலிருக்கும் பெண்கள் இனிமேல் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகள் என்று பெருமையோடு கூறும் அளவிற்கு திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றும் திட்டமாக உள்ளது.
பெரியாரின் பெண் உரிமை இங்கு நிலை நாட்டப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசாக செயல்படுகிறது. பெண்ணுரிமை நிலைநாட்டப்பட்டு, பெண் முன்னேற்றம் கொண்ட கலைஞர் (கருணாநிதி) அரசாக உள்ளது. கலாச்சாரம், சட்ட ரீதியாக பெண்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள் என பெரியார் கூறினார். பெண்கள் சுதந்திரமாக வாழ இந்த திட்டத்தில் கிடைக்கும் உரிமைத்தொகை பயன்படும்.
மற்ற அடிமைத்தனத்தை விட ஆண், பெண் என்ற அடிமைத்தனம் மிகப் பெரியதாக உள்ளதாக பெரியார் கூறியிருந்தார். பெண்கள் வீட்டு வேலைகள் மட்டும்தான் செய்ய வேண்டிய நிலை இருந்தது. தற்போது பெண்களும் வாழ்வாதாரத்தில் முன்னேறும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பெண்களுக்கு சொத்துரிமையில் பங்கு என சட்டத்தை கலைஞர் அரசு செயல்படுத்தியது.
அதன் அடிப்படையில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் சிறுமியாக இருக்கும்போது தந்தையையும், பெண்ணாக மாறும்போது கணவரையும், முதியவராக மாறும்போது தனது பிள்ளைகளையும் எதிர்பார்க்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்கள் படிப்பிற்காக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கட்டணம் இல்லா பேருந்து வசதி திட்டம் மற்றும் 33 ஆயிரம் பள்ளிகளுக்குச் செயல்படுத்தப்படும். முதலமைச்சர் காலை சிற்றுண்டி உணவு திட்டம் மிக முக்கிய திட்டமாக உள்ளது. கலைஞர் அரசின் மகுடம் சூட்டிய திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் உழைப்பிற்கு அண்ணனாக இருந்து தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
பெண் கல்வி மற்றும் பொருளாதாரம் பொது வாழ்க்கையில் உயர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான உரிமையை நிலை நாட்ட முடியும் எனவும் தெரிவித்தார். பெண்கள் பகுத்தறிவை சரியாக பயன்படுத்த வேண்டும். உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத பெண்கள் வந்துள்ளனர். மேயர், நகராட்சித் தலைவர், ஊராட்சி குழுத் தலைவர் என அனைத்து பொறுப்பிலும் பெண்கள் வந்துள்ளனர்.
மகளிர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் தனக்கு பிறக்கும் குழந்தைகளும் பகுத்தறிவுடன் செயல்படுவார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு பெண்களின் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் நல்ல வளர்ச்சியை தரும்” எனத் தெரிவித்தார்.