சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வன்னியர் மக்களுக்காக இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டத்தில் உயிரிழந்த 21 பேர் குடும்பத்தினருக்கு என் சொத்தை விற்றாவது வீடு கட்டித் தருவேன். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கட்சியும், ஆட்சியும் மாறும்.
மேலும், திமுக ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது வன்னியர் மக்களுக்காக இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் வீரபாண்டியார் தானே தவிர, பாமக நிறுவனர் ராமதாஸ் அல்ல. ஆனால், அதிமுக ஆட்சியில் தான் வன்னியர் மக்களுக்காக இட ஒதுக்கீடுக்காக வழங்கக் கோரி நடந்த போராட்டத்தில் 21 பேர் பலியாகினர்.
வன்னியர்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக 25 கோரிக்கைகளை திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தலைமையிடம் கோரிக்கையாக வைத்துள்ளேன். பாமக மற்றும் வன்னியர்களின் வரலாறு தெரியாதவர்களை வைத்து ராமதாஸ் என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 2.5 கோடி வன்னியர்களை காப்பாற்ற என்னால் தான் முடியும் என்று அக்கட்சியைச் சேர்ந்த பலர் என்னிடம் தொலைபேசி வாயிலாகக் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.