சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 16ஆயிரத்தை கடந்துள்ளது. தினசரி கரோனாவால் 300 பேர் பாதிப்புக்குள்ளாவதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாநகர் செவ்வாய்ப்பேட்டை தாண்டவன் தெருவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும் கரோனாவால் பலியாகியுள்ளனர்.
மகன்கள் இறந்த துக்கத்தில் தவித்த 70 வயது தாய் மனவேதனையில் இருந்தார். உணவும் உண்ணாமல், மனம் பேதலித்த நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்நிலையில் உடல்நலம் குன்றிய நிலையில் செப்டம்பர் 24 ஆம் தேதி காலை அவர் உயிரிழந்தார். மகன்கள் இறந்த துக்கம் தாளாமல் தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செவ்வாய்பேட்டை பகுதி மக்கள் கூறியதாவது, சேலம் மாநகராட்சி நிர்வாகம் முறையாக தூய்மை பணிகளை இப்பகுதியில் மேற்கொள்வதில்லை. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் தாண்டவன் தெரு மக்கள் கரோனா பாதிப்பு அச்சத்தில் தவிக்கின்றனர்.
மூன்று பேர் இறந்த பிறகு மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது . இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து பல நாள்களுக்கு முன்னரே எடுத்திருந்தால் கரோனா பரவல் கட்டுப் படுத்தப்பட்டிருக்கும். மூன்று பேர் இறந்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் அரங்கேறிய ஆணவப் படுகொலை?