சேலம் மாவட்டத்தில் நேற்று (பி.15) தேசிய குடற்புழு நீக்க வாரம் கடைபிடிக்கப்பட்டது. அதனை ஒட்டி சேலம் தொங்கும் பூங்கா மாநகராட்சி அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதன்பிறகு , சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கட்டண சிகிச்சை பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் உள்ளது போல் சேலம், மதுரை, கோவை அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை பிரிவு துவங்கப்படும் என 2022ல் அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலத்தில் தற்போது 10 கட்டண படுக்கைகள் வசதி கொண்ட சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளதாகவும், இதில் தனியார் மருத்துவமனையை விட கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த வந்தவரிடம், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்காமல் உடனடியாக எழுந்து நின்று, ' நல்ல விஷயங்களைப் பேசி கொண்டு இருக்கிறோம்.... இப்ப போய்...' என்று எரிச்சலாக கூறிவிட்டு, செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: 'பிரபாகரன் சொல்லிட்டு வருபவர் அல்ல; வந்துவிட்டு சொல்பவர்' - சீமான் அதிரடி பேச்சு