Latest Crime News ஸ்மார்ட்ஃபோன் வருகையால் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் போல டிக்-டாக் என்ற பெயரிலான செயலி 2016ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
சீனத்தைச் சேர்ந்த ஃபைட் - டான்ஸ் என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டிக்-டாக் செயலியில் 30 வினாடிகளுக்குப் பயனாளிகள் தங்களைப் படம் பிடித்து, பாடல் அல்லது உரையாடல்களுடன் பதிவேற்றம் செய்ய முடியும்.
டிக்-டாக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டபோது, மக்கள் தங்களிடமுள்ள ஆடல், பாடல் உள்ளிட்ட தனித்திறமைகளை 30 வினாடிகளில் வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்கு உதவுவதுதான் இந்தச் செயலியின் நோக்கம் என்ற அறிவிப்பு ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட டிக்-டாக் செயலி, இப்போது ஆபாசக் குப்பைக் கிடங்காக மாறிப் போயிருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்துவருகின்றனர். இதனால் சில நாட்களுக்கு முன்பாக டிக்-டாக் செயலியை தடைசெய்து உத்தரவிடப்பட்டு, பின்னர் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
டிக்-டாக் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யும் உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் தணிக்கையும் இல்லை.
இதனால் இளையதலைமுறையினர் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களைப் பாடுவது, திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு ஏற்றவகையில் கவர்ச்சியான உடல்மொழியால் நடனமாடுவது போன்ற பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர். இந்த நிலையில் டிக்-டாக்கில் பிரபலமான பெண்களின் பல வீடியோக்கள் ஆபாச வலைதளத்தில் தற்போது வெளியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனையறிந்த அந்தப் பெண்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சமூகவிரோத விஷமிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு, இளம்பெண்கள் வாழ்க்கையை சீரழிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் டிக்-டாக் இணையவாசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.