சேலம், அம்மாபேட்டை, பாலாஜி நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாஷா (52). இவரது மனைவி உமையா பானு (45). இவர் அரசு சார்ந்த இஸ்லாமியப் பெண்கள் உதவி மையத்தின் செயலாளராக இருந்து வந்தார். அப்போது, பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூல் செய்து இவர் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் 12ஆம் தேதி வீட்டின் உள்ளே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உமையா பானு கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக அம்மாபேட்டை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அக்பர் பாஷா (43) உமையா பானுவிடம் 40 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்து போனதும், இதனால் அவர் தனது நண்பர்கள் அப்சர் (29), ரகுபதி (29) ஆகியோருடன் உமையா பானு வீட்டிற்குச் சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது ஏற்பட்ட தகராறில் மூவரும் உமையா பானுவை சராமரியாக தாக்கி, வாயில் துணியை அடைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து், அம்மாபேட்டை தனிப்படை காவல் துறையினர் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: முடிவெட்ட சொன்னதால் தவறான முடிவெடுத்த இளைஞர்!