சேலம்: மோனிஷ் குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்ப்பதற்காக சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திரையரங்கில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்திருந்தார்.
15 டிக்கெட் பதிவு செய்த அவர் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு சென்ற போது, திரையரங்கில் டிக்கெட் கவுண்டரில் இருந்தவர்கள் 15 டிக்கெட்டிற்க்கும் 15 பாப்கார்ன் பாக்கெட் கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளனர். அதற்கு மோனிஷ் குமார் மறுப்பு தெரிவிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆவேசம் அடைந்த திரையரங்கு ஊழியர்கள் மோனிஷ் குமாரிடம், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளவும், எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுத்துக் கொள்ளவும், இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று அலட்சியமாக தெரிவித்துள்ளதை மோனிஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது மட்டுமின்றி திரையரங்கு ஊழியர்கள் பேசிய வீடியோ காட்சியையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.
ஓ.டி.டி. மற்றும் இணையங்களில் திரைப்படங்கள் வெளியாவதால் ஏற்கனவே திரையரங்குகளில் பொதுமக்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது திரையரங்கிற்கு வருபவர்களிடம் கட்டாயமாக உணவு பொருளை திணிப்பது சினிமா ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஜென்டில்மேன் 2 ஹீரோவாக சேதன் - தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு!