சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி தலைமைக் காவலர் தங்கதுரை நேற்றிரவு தாதகாப்பட்டி கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கந்தப்ப காலனியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்தபோது தங்கதுரை அவரைப் பிடித்து விசாரணை செய்தார்.
அப்போது, மணிகண்டன் அன்னதானப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிங்காரவேலுக்கு போன் செய்து தலைமைக் காவலர் தங்கதுரையிடம் சிபாரிசு செய்து விடுவிக்குமாறு கூறினார். அதன்படி காவல் உதவி ஆய்வாளர் சிங்காரவேல், தங்கதுரையிடம் சிபாரிசு செய்தார்.
ஆனால், தங்கதுரை சிபாரிசினை ஏற்க மறுத்துள்ளார். இதையடுத்து, சிங்காரவேல் நேரில் வந்து தங்கதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். பின்னர் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் காவலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டும் சாலையில் உருண்டும் சண்டையிட்டுக் கொண்டனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்களும், பணியில் இருந்த மற்ற காவலர்களும் சமாதானம் செய்தனர். இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் சிங்காரவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மேலும், தலைமைக் காவலருடன் காவல் உதவி ஆய்வாளர் சண்டையிட்ட சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தினை விசாரித்த காவல் ஆணையர் சங்கர் காவல் உதவி ஆய்வாளர் சிங்காரவேலுவை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.