சேலம்: மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 16ஆம் தேதி எட்டியது. இதையடுத்து மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி நீரை அப்படியே வெளியேற்றப்பட்டது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் மேட்டூர் அனல் மின் நிலைய சாலை சின்ன கண்ணூர் பகுதியில் தாரமங்கலத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் நீரில் இறங்கி செல்பி எடுத்துள்ளனர். நீரின் அளவு அதிகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நின்றிருந்த பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இளைஞர்கள் வெள்ள நீரில் சிக்கி அங்கே நின்று கொண்டிருந்தனர்.
இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் தங்களின் உயிரை துச்சம் என நினைத்து போராடி சுமார் ஒரு மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்டனர்.
இந்த நிலையில் இன்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து அவர் வீரர்களுடன் பேசுகையில், வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்களை தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து அவர்களை ஒரு மணி நேரத்திற்கு மீட்கப்பட்ட செயல் பெரும் பாராட்டுக்குரியது சொல்லில் அடங்காத செயலை செய்துள்ளீர்கள் என்று பாராட்டினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம், 4 மாணவர் சங்க நிர்வாகிகள் கைது!