சேலம் மாவட்டம் கரட்டூர் பகுதியில் மணி என்பவருக்குச் சொந்தமான பஞ்சர் கடை இயங்கி வருகிறது. இதன் அருகே இரண்டு லாரி பழுது பார்க்கும் பட்டறை வரிசையாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 29) அதிகாலை லாரி பழுது பார்க்கும் பட்டறையின் பின்புறம் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவி பஞ்சர் கடை, இரண்டு லாரி பழுது பார்க்கும் பட்டறைகள் மற்றும் இரண்டு பழைய கார்கள் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இரண்டு பழைய கார்கள், பஞ்சர் கடையில் இருந்த 30 மேற்பட்ட டயர்கள், லாரி உதிரிபாகங்கள் என 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென மூன்று பட்டறைகளில் அடுத்தடுத்து தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.