சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி அடுத்த ஏற்காடு சாலையில் அமைந்துள்ளது பூட்டு முனியப்பன் கோயில். இந்தக் கோயிலில் பக்தர்கள் வேண்டுதல் வைத்து, அது நிறைவேறும் பட்சத்தில் பூட்டை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
சமீப காலமாக தமிழ்நாடு அளவில் மிகவும் பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் இருந்த வெண்கலத்தினாலான காளியம்மன் சிலை நேற்று (பிப்.18) இரவு அடையாளம் தெரியாத நபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது. இன்று (பிப்.19) காலை பூசாரி, பக்தர்கள் கோயிலுக்கு வந்து பார்த்தபோது அம்மன் சிலை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அஸ்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிலை திருடிய அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுராந்தகம் அருகே பழமைவாய்ந்த கற்சிலை கண்டுபிடிப்பு