சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லம் முன்பாக 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்த பயிற்சி ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு வழங்கினர்.
பாதிக்கப்பட்ட பயிற்சி ஆசிரியரின் கருத்து
இது தொடர்பாக வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட பயிற்சி ஆசிரியர் மணி கூறுகையில், "2013ஆம் ஆண்டு 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்தால் வெற்றி 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் பணி என்ற நிலையில், 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று பணிவாய்ப்பு பெறக்கூடிய சூழலில் மதிப்பெண்தளர்வு என்று, தேர்வு எழுதி, வெற்றிபெற்றவர்களின் பட்டியல் வெளியிட்ட பின்பு வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு சென்ற பின்பு குறிப்பிட்ட மதிப்பெண்களை (90) வெற்றி மதிப்பெண்களாக சொன்ன பிறகு திடீரென்று வெற்றிக்கான மதிப்பெண்களை (82) குறைத்ததாலும், வெய்ட்டேஜ் முறை என்ற ஒவ்வாத ஒரு கணக்கீட்டு முறையினாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக பணி வாய்ப்பை இழந்த சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு பணி கேட்டு காத்திருக்கிறோம்.
வெயிட்டேஜ் முறையினால் 150 மதிப்பெண்களுக்கு 120 மதிப்பெண் எடுத்தவர்கள் பணிக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் பணிக்கு சென்றுவிட்டார்கள். அரசும் வெயிட்டேஜ் முறை தேவை இல்லாத ஒன்று என அதனை நீக்கிவிட்டது. ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக சேர்ந்து இருப்பதால், பணி வாய்ப்பில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி தொடர்ந்து முதலமைச்சர் செல்லும் பல்வேறு இடங்களில் மனு கொடுத்து வந்தனர்.
ஆகவே அரசும் தவறான நடைமுறை என வெயிட்டேஜ் முறையை நீக்கியதால் அந்த முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பணி வாய்ப்பை வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சுமார் 300-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சரை சந்திக்க தற்போது வந்துள்ளோம்" என்றார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பயிற்சி ஆசிரியர்களை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் மனு அளிக்க பாதுகாப்பு அலுவலர்கள் அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க...முதலமைச்சருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்!