சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான டாஸ்மாக் பணியாளர்கள் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பிரதிநிதிகளாக கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் டாஸ்மாக் நிர்வாக அலுவலர்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சரவணன் கூறுகையில்,
"தமிழ்நாட்டில் அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துவருவது தொடர்கதையாக இருக்கிறது. ஒரு கடையின் ஊழியர் இன்னொரு கடையில் உள்ள இருப்பு விவரங்களை ஆய்வு செய்யும் முறையை அலுவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.
இதனால் முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல ஒரு மாவட்ட மேலாளர் இன்னொரு மாவட்டத்திற்குச் சென்று டாஸ்மாக் கடைகளை ஆய்வு நடத்தியும் வருகிறார். இதையும் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்துவதோடு, டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தால் பலமுறை அரசுக்கும் நிர்வாகத்திற்கும் வழங்கப்பட்டுள்ள 30 அம்ச கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திட சங்கப் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும்.
வழிப்பறி கொள்ளையர்களால் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளான பணியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விற்பனைத் தொகை கொள்ளை போகும் சம்பவங்களில், அந்தப் பணத்தினை பணியாளர்களை கட்ட நிர்பந்திக்கும் போக்கினை டாஸ்மாக் நிர்வாகம் கைவிடுவதோடு; அதேபோல பண ஆதாயங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகின்ற முறையற்ற டாஸ்மாக் கடை ஆய்வுகளையும் நிர்வாகம் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசு உடனே தலையிட்டு டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வரவேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுபானங்களுக்கு கூடுதலாக வசூலிக்க அரசுதான் ஊக்குவித்தது - டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர்