சேலத்தில் இன்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் செங்கோட்டுவேல், " கடந்த 4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கேட்டு போராடி வருகிறோம். அண்டை மாநிலமான கர்நாடகாவில், வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினத்தில், அம்மாநில அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி, பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களை வஞ்சித்து வருகிறது.
எங்களின் கோரிக்கைகள் குறித்து பல கட்டமாக தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை . நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன . அந்த தேர்தல் அறிக்கையில் பால் உற்பத்தியாளர்கள் குறித்து எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. இதனால் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். எனவே இன்று மாநில பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.
இன்னும் இருபது நாட்களுக்குள் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று எந்த அரசியல் கட்சி வாக்குறுதி அளிக்கிறதோ அவர்களுக்குத்தான் நாங்கள் ஆதரவைத் தருவதாக செயற்குழு ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அப்படி ஆதரவு முடிவை அரசியல் கட்சிகள் வழங்கவில்லை என்றால் வாக்குப்பதிவு நாளன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்ய இருக்கிறோம் . மேலும் பால் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.