சேலம் மாவட்டம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் மாநகர், புறநகர் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், "ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க அமைச்சர்கள், அலுவலர்கள் இரவு பகல் பாராமல் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். மீட்கும் பணியில் அரசு முழு வீச்சில் ஈடுபட்டது. உயிரோடு மீட்க முடியாதது வேதனையளிக்கிறது. மீட்புப் பணிகள் அனைத்து ஊடகங்களுக்கும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது.
முடிந்தவரை சுஜித்தை உயிரோடு மீட்க முயற்சி செய்தோம். துர்பாக்கியமாக உயிரோடு மீட்க முடியவில்லை. சுஜித் விவகாரத்தில் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டே அரசின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் தவறாக குற்றம் சுமத்திவருகிறார். மத்திய அரசின் உத்தரவின்படிதான் மீட்புப் பணிகளுக்கு என்.டி.ஆர்.எஃப்., எஸ்.டி.ஆர்.எஃப். உள்ளிட்ட வீரர்களைப் பயன்படுத்தினோம்.
சுஜித் பிரச்னையில் அரசு தெளிவாக விளக்கம் அளித்தபோதும் அதை ஏற்றுக்கொள்ளாமல், அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை கூறிவருவது வருத்தமளிக்கிறது. அரசின் விளக்கத்தை பெற்றோரே ஏற்றுக்கொண்டனர். ஆனால், தேவையற்ற புரளிகளைப் பரப்ப வேண்டாம்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அங்கீகரிக்கப்படாத மருத்துவச் சங்கத்தை சேர்ந்தவர்கள், திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் வரவைக்க முயற்சிக்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சங்கங்களை அழைத்துப் பேசி அவர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளோம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சங்கங்கள் வைத்த கோரிக்கைகள் மட்டுமே அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். பணிக்குத் திரும்பமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபடுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்களைக் காலிப் பணியிடமாக அறிவிக்கபட்டு விரைவில் நிரப்பப்படும். ஏழை, எளிய மக்கள் மருத்துவர்களை இறைவனுக்கு சமமாக பார்க்கிறார்கள். எனவே மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.