தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் சேலம் மாநகரமும் அடங்கும். இங்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் சேலம் மாநகரப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
அதன் காரணமாக 5 ரோடு, புதிய பேருந்து நிலையம், நான்கு ரோடு, பழைய பேருந்து நிலையம், சாரதா மகளிர் கல்லூரி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது. அதுமட்டுமல்லாமல் 5 ரோடு பகுதிக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது.
அதனால் நீண்ட காலமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலம் கட்டித்தர கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 5 ரோடு பகுதியை மையமாக கொண்டு மேம்பாலம் அமைக்கப்படும் என 2015ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
அதில் சாரதா கல்லூரி சாலையில் ராமகிருஷ்ணா பிரிவு ரோட்டிலிருந்து ஏவிஆர் ரவுண்டானா வரையில் ஒரு பிரிவாகவும், சிறுமலர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து குரங்குச்சாவடி வரையில் மற்றொரு பிரிவாகவும் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்காக ரூ. 441 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன.
இந்த இரு சாலைகளுக்கும் மேல் 6.8 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 5 ரோட்டிலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரை ஈரடுக்கு மேம்பாலமாக கட்டப்பட்டுள்ளது. சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குரங்குச்சாவடி பகுதியிலிருந்து நேரடியாக சில நிமிடங்களில் 7 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் அரசு மருத்துவமனை, மாநகராட்சி அலுவலகம், பழைய பேருந்து நிலையம் சென்றுவிட முடியும். அதனால் நகரின் எந்த பகுதியிலிருந்தும் 5 ரோடு வழியாக ஆம்புலன்ஸ்கள் எளிதாக மருத்துவமனையை அடைய முடியும்.
முக்கிய சுற்றுலாத் தளமான ஏற்காட்டிற்கு, பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக வரும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் எளிதில் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல முடியும். முக்கிய இடங்களுக்கு சென்றிட முடியும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். மருத்துவச் சேவைக்காக விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ்கள் ஊரகப் பகுதியில் இருந்து நகரின் மத்தியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்து செல்லவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றலாத் தலமான ஏற்காட்டிற்கும் இந்த பாலத்தின் வழியே நகரின் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் விரைவாக செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பேருந்துகள் மேம்பாலத்தில் இருந்து நேரடியாக பேருந்துநிலையத்திற்குள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செக்மெண்ட் அடிப்படையில் அதிநவீன தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ஈரடுக்கு மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 11) திறந்து வைத்தார். மேலும் மாம்பழ நகரம், இரும்பு நகரம், கைத்தறி நகரம் என பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள சேலம் மாநகரம் தற்போது மேம்பால நகரம் என்னும் சிறப்பினையும் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காணொலி வாயிலாகத் திறந்துவைக்கப்பட்ட காளவாசல் உயர்மட்ட பாலம்