தமிழ்நாட்டில் உள்ள ஏழை - எளிய பெண்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள விலையில்லா கறவை பசுமாடுகள் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து கறவை பசுமாடுகளை அரசு வழங்கி வருகின்றது.
இந்தநிலையில் சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகில் உள்ள அரியாம்பட்டி ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு கறவை மாடுகளை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் வழங்கினார். அதைத் தொடர்ந்து கறவை பசுமாடுகளை வளர்ப்பது குறித்த பயிற்சி முகாமையும் தொடங்கி வைத்தார்.
மேலும் பால் கொள்முதல் நிலையத்தையும் திறந்து வைத்த அவர், நிகழ்ச்சியின் இறுதியாக முதியோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அரசு அலுவலரிடம் ஒப்படைத்து, மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவுமாறு அரசு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் செல்வகுமார், அதிமுக ஒன்றியச் செயலாளர், நிர்வாகிகள், தொண்டர்கள் , அரியாம்பட்டி பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'கரும்புக்கான நிலுவைத் தொகையைப் பெற்றுத் தாருங்கள்' - கலங்கிய விவசாயிகள்