கரோனா ஊரடங்கு காலத்திலும், தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடு தேடிச்சென்று உணவு பொட்டலங்களை டெலிவரி செய்யும் 'ஸ்விகி' ஊழியர்கள், தற்போது அந்நிறுவனத்தின் ஊதிய குறைப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் ஸ்விகி நிறுவனம் தற்போது கரோனா தடைக்காலத்தை காரணம் காட்டி, டெலிவரி ஊழியர்களின் மதிப்பூதியத்தை பாதியாகக் குறைத்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து, தவித்து வருவதாக ஸ்விகி ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சேலம் ஏ.வி.ஆர் வளைவு அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்விகி டெலிவரி ஊழியர்கள் ஒன்று திரண்டு, அந்த நிறுவனத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த சேலம் ஸ்விகி ஊழியர்," தடை உத்தரவு காலத்திலும் எங்களது பணியை தொய்வில்லாமல் செய்து வருகிறோம். தடை செய்யப்பட்ட பகுதி முதல் சேலம் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இரவு, பகல் பாராமல் நாங்கள் வாடிக்கையாளர் களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறோம்.
இந்நிலையில் ஸ்விகி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தபோது எங்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் தருவதாக கூறினர். ஆனால் இதுவரை எங்களுக்கு ஊதியம் என்று எதுவுமில்லை . ஊக்கத் தொகை மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது . அதுவும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஸ்விகி நிறுவனம் கரோனா தடை காலத்திற்கு முன்பு வழங்கப்பட்ட இன்சென்டிவ் தொகையை போலவே தற்போதும் வழங்கி எங்களை காப்பாற்ற முன்வர வேண்டும் " என்று தெரிவித்தார்.