சேலம்: பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில், சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. அதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வரலாற்றுத்துறையில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவரிடம் அதே துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்த கி.பிரேம்குமார் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், சாதிப்பெயரை கூறி திட்டி மிரட்டல் விடுத்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
பேராசிரியர் மீது பொய் வழக்கு: எனவே, உதவிப்பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து உதவிப்பேராசிரியர் மீது பாலியல் தொந்தரவு அளித்தது; கொலை மிரட்டல் விடுத்தது; சாதிப் பெயரை சொல்லி திட்டியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு கடந்த 4ஆம் தேதி மாலை வந்தனர்.
அப்போது அவர்கள் அளித்த பேட்டியில், “பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர் பிரேம்குமார் மீது பொய்ப் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரலாற்றுத்துறையில் அலுவலகப் பணியாளர் சரிவர பணிகளை மேற்கொள்ளாத நிலையில் உதவிப்பேராசிரியர் பிரேம்குமார் தட்டிக் கேட்டார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
பின்னணியில் துணைவேந்தர்: அதேபோல் இயற்பியல் துறைத் தலைவர் ஓய்வுபெறும் நிலையில், மீள் பணியமர்த்தம் செய்வதற்கு ஒப்புதல் தரக் கூடாது என சட்டத்துறைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் உதவிப்பேராசிரியர் பிரேம்குமாரை பணி இடைநீக்கம் செய்தது. இந்நிலையில் அவர் மீது பொய்ப்புகாரின் கீழ் காவல் துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவியை வேண்டுமென்றே தூண்டிவிட்டு புகார் அளிக்க செய்துள்ளனர். இதன் பின்னணியில் துணைவேந்தர் உள்ளிட்டப் பேராசிரியர்கள் உள்ளனர். உதவிப்பேராசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்பவர் கிடையாது. சாதியப்பாகுபாடு காட்டியும் பேசியது கிடையாது. எனவே, இது பற்றி மாவட்ட நிர்வாகம் காவல்துறை மூலம் விசாரித்து உண்மை கண்டறிய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
பரபரப்பு வீடியோ: இந்நிலையில், ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த மாணவியரை பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் சிலர் நேரில் அழைத்து மிரட்டி, அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து கொண்டதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாணவியர் வெளியிட்டுள்ள இந்த வீடியோக்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
இந்த வீடியோ குறித்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , ”உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் நீக்கப்பட்ட விவகாரம் விசாரணையில் உள்ளது. அது தொடர்பாக எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது” என்று தெரிவித்து விட்டார்.
இதையும் படிங்க: திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது- மு.க. ஸ்டாலின்