சேலம்: டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
சேலம் உடையார்பட்டி அருகே அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், "வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததை எதிர்த்து அந்தந்த மாநில அரசுகள் வழக்கு தொடுத்திருக்கும் நிலையில், எடப்பாடி மட்டும் ஏன் ஆதரிக்கிறார். பச்சை துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. சட்டத்தை கொண்டு வந்தவர் ஏழை தாயின் மகன், அதை ஆதரிப்பவர் தன்னை விவசாயி என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
உடனடியாக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவசர சட்டத்தை இயற்றி செய்த பாவத்துக்கு பிரயாச்சித்தம் தேடிக்கொள்ளுங்கள். வேளாண் சட்டத்தினால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. விவசாயிகளுக்கும் பயனில்லை. எனவே, விவசாயிகளை அழைத்துப் பேசவேண்டும்.
மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி அனைத்து கட்சி தலைவர்களிடமும் பேசி வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறவேண்டும். ஜனநாயகத்திற்கு கட்டுப்பட்ட ஆட்சி என்பதை மத்திய அரசு நிரூபிக்கவேண்டும், இல்லையேல் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், துணையாகவும் திமுக நிற்கும்" என்றார்.
இதையும் படிங்க: கொட்டும் மழையில் குடை பிடித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்