பாஜகவின் முதலீட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சேலம் சாரதா கல்லூரி சாலையிலுள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளர் கே.டி. ராகவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகவன், ”திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் மறைவிற்கு பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்குப் பின்னால் திமுக உள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது எனவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், புதிய குடியுரிமை சட்டத்தால் என்ன பாதிப்பு உள்ளது என்று கேட்டபோது அந்த கேள்விக்கு திமுக, காங்கிரஸிலிருந்து ஒருவர் கூட பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், “பொய்யான தகவல்களின் மூலமாக நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்ற சில இஸ்லாமிய அமைப்புக்கள் இது ஒரு வேலையாக செய்து வருவது வேதனையளிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின், இஸ்லாமிய அமைப்பினரை பாதுகாப்பது போல் அவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறார்” என்றார்.
இதையும் படிங்க: 'சைன்ஸ் பசார்' கண்காட்சி; ட்ரிமர்கள் கொண்டு முடிவெட்டும் கருவி காட்சிப்படுத்தல்