காவல்துறை சார்பில் ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு காவல் அலுவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானீகர் நியமித்துள்ளார். இதனையடுத்து சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டி பகுதியில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று (ஜன.5) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், "தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும், திருட்டு நடக்காமல் இருக்கவும் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவல் அலுவலர்கள் அடிக்கடி கிராமங்களுக்கு வந்து பொதுமக்களை சந்தித்து செல்வார்கள், இவர்களிடம் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம். பொதுமக்கள் தரும் தகவல்கள் காவல்துறையினருக்கு பெரும் உதவியாக இருக்கும். குற்றச் செயல்களை தடுக்க பொதுமக்கள் காவல்துறையினருக்கு உதவ வேண்டும்"என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானீகர் கூறுகையில், "மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட கிராமங்களில் 350 கண்காணிப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெரிய கிராமங்களில் ஒருவரும், ஒரு சில இடங்களில் மூன்று குக்கிராமங்களுக்கு ஒருவரும் கண்காணிப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூடுதலாக 50 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
குற்றத் தடுப்பு, மதுவிலக்கு, சட்டம் ஒழுங்குப் பிரச்னை என அனைத்து தகவல்களையும் பொதுமக்கள், கண்காணிப்பு காவல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்" என்றார்.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, ஏழை மாணவர்கள் 25 பேருக்கு நோட்டு புத்தகங்களை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இலவசமாக வழங்கினார். இதில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார், கூடுதல் டிஎஸ்பி பாஸ்கர், டிஎஸ்பி உமாசங்கர், ஆய்வாலர்கள் உள்ளிட்ட சேலம் மாவட்ட காவல்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கமல்ஹாசன் சீரமைப்பதற்கு ஒன்றும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு